பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் : 1 - 10

பிழையின்றித் தமிழ் பேசுவோம்,         எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 1:-

ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...


அச்சுறுத்த வேண்டா:-
"தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.

தமிழில்,

"எழுத்தெனப் படுவ

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃது என்ப...''*

என்றார் தொல்காப்பியர்.

ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.
கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?

ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.

அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.
என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.

தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.

தமிழ் இயற்கை மொழி:-
மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.

எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து "என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?'' என்போமன்றோ? வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "". சற்று அதிகம் திறந்தால் "" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

ஒலிப்பு - உச்சரிப்பு:-
இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.
நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.
தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.

தமிழ் என்னும் சொல்லில், -வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.

தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள்.
தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.

"தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.

"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று , , மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.

நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.

இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

நுண்ணொலி வேறுபாடுகள்:-
தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.

அதனால், "சார் இங்கே என்ன ""னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர்.

பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.

மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் ""கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் ""கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி ""கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.

இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:-

தால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);

தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);

வால் - தூய்மை (வெண்மை)

வாலறிவன், வாலெயிறு;

வாள் - வெட்டும் கருவி,

வாழ் - வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்.


பிழையின்றித் தமிழ் பேசுவோம்,    எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
மொழிப்பயிற்சி - 2:-

இடையின ரகரம், வல்லின றகரம்:-
இவற்றைச் சின்ன "ர" பெரிய "ற" என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது. பெரியவருக்குச் சின்ன "ர" போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற" போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

ய,ர,ல,வ,ழ,ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று "ர".
க,ச,ட,த,ப,ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று "ற".
தகராறு எனும் சொல்லில் (தகர் + ஆறு) "ர்" இடையினம்; "று" - வல்லினம்.

சுவர் என்னும் சொல்லுடன் "இல்" உருபு சேர்த்தால் சுவர் + இல் = சுவரில் என்றுதான் ஆகும். ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு + இல் = சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள்.

சோறு + இல் = சோற்றில் என்பது சரி. (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்)

கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

"ண"கர, "ந"கர, "ன"கரங்கள்:-

மூன்று சுழி "ண"னா, இரண்டு சுழி "ன"னா, காக்கா மூக்கு "ந"னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டு விடுவோம்.

தமிழ் எழுத்துகளின் வரிசையில்
"ட" பின் வருவது டண்ணகரம்;
"த"பின் வருவது தந்நகரம்;
"ற"பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும்.

இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகி விடும். பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும். ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

பனி - குளிர்ச்சியானது
பணி - பணிந்து போ, தொண்டு
பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை
அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்த நாள்.

எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம். இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

சரியெனக் கருதும் பிழையானச் சொற்கள்:-
1. கோர்வை, கோர்த்து:-
அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு "ர்" சேர்ப்பது தவறு.
சான்று:- நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).

2. முகர்ந்து:-
மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது.

முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது. மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது. மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா? மோப்பநாய், "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பன காண்க.

3. முயற்சிக்கிறேன்:-
"உனக்காக நான் முயற்சிக்கிறேன்" என்று பேசுகிறார்கள்.
உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது பிழை. முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது.

ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே. ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

4. அருகாமையில்:-
என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்.
இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

5. முன்னூறு:-
"நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்" என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும்.
முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும்.
மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி மு + நூறு = முந்நூறு ஆகும்.


பிழையின்றித் தமிழ் பேசுவோம்,    எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
மொழிப்பயிற்சி - 4:-


13.பண்டகசாலை:-
பண்டங்கள் உடைய இடம் பண்டகம் அல்லது பண்டசாலை எனல் போதுமானது. ஆனால் கூட்டுறவுப் பண்டக சாலை என்னும் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. அகம் எனின் மனம், வீடு, இடம் எனப் பலபொருள் உண்டெனினும் ஈண்டு இடம் எனப் பொருள் கொள்க. நூல்கள் உடைய இடம் நூலகம்; பண்டங்கள் உடைய இடம் பண்டகம்.

பின் ஏன் சாலை என்று ஒரு சொல்? உணவுச்சாலை என்பது போல் பண்ட சாலை எனலும் சரியாம்.

14.பதட்டம்:-
நம் மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்திலும் பதட்டம் எனும் சொல் நிரம்பப்பயன்பாட்டில் உள்ளது. இச்சொல்லுக்குப் பொருள் இல்லை. இது பதற்றம் என்று இருத்தல் வேண்டும். பதறு, பதற்றம் எனும் சொற்கள் சரியானவை; பொருளுடையவை. இனி, பதட்டம் விட்டு பதற்றம் கொள்ளுவோம்.

15.கண்றாவி:-
இப்படி ஒரு சொல் எந்த அகர முதலியிலாவது (அகராதி) பார்த்ததுண்டா? இப்படி ஒரு சொல் இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கிறோம். கேட்கிறோம். மிகக் கொடிய காண்பதற்குக் கூடாத காட்சியை இப்படிச் சொல்லி வருகிறோம். இது கண் அராவும் காட்சி. ஆதலின் இச்சொல் கண்ணராவி என்றிருத்தல் வேண்டும். (அராவுதல்- இரும்பால் தேய்த்தல், அறுத்தல்)

ஊர்ப் பெயர்த் திரிபுகள்:-
பயன்பாட்டில் உள்ள பல சொற்கள் எப்படிப் பிழையானவை என்பது பற்றி எடுத்துக் காட்டுகள் வழியாகப் படித்தீர்கள். இவ்வாறே பல ஊர்களின் பெயர்கள் சிதைந்து பொருள் திரிந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆறுகளால் பெயரமைந்த ஊர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, அடையாறு, செய்யாறு, திருவையாறு எனும் பெயர்கள் காண்க.

அடையாறு என்பதை அடையார் என்று எழுதுகிறார்கள். பேருந்துகளிலும், பெயர்ப் பலகைகளிலும் காண்கிறோம்.
அடையார் என்றால் அடையமாட்டார் என்று பொருள். இனிப்பகம் ஒன்று அடையார் எனும் சொல்லோடு பயன்பாட்டில் உள்ளது. அந்த இனிப்பகத்தை யாரும் சென்றடையமாட்டார்களா? எவ்வளவு பெரிய தவறு இது?

செய்ய நீர் (சிவந்தநீர் - புதுவெள்ளம்) ஓடிய ஆறு செய்யாறு. அந்த ஆற்றின் பெயரமைந்த ஊரைச் செய்யார் என்று எழுதியுள்ளார்கள். செய்யமாட்டார் என்ற பொருள் இதற்குண்டு. என்ன செய்யமாட்டார்? ஏன் செய்யமாட்டார்? இப்படிச் சிதைக்கலாமா?

தஞ்சை அருகே திருவையாறு எனும் திருத்தலம் ஒன்றுள்ளது. ஐந்து ஆறுகள் அருகருகே ஓடிச் செழித்த மண் இது. இந்தத் திருவையாற்றைத் திருவையார் என்றெழுதுகிறார்கள். திருவையுடையவர் இவர் என்று பொருள் சொல்லலாமா? அல்லது திரிகை (மாவு அரைக்கும் சிறு கருவி) எனும் சொல்லை "திருவை" என்று பாமரர் சொல்லுவர். இவர் திருவையார் என்பதா? என்ன கொடுமை இது? ஆறுகளின் பெயர்களும் இப்படி ஆர் விகுதியோடு வழங்கப்பட்டு வருகின்றன.

காட்டாறு என்பதைக் காட்டார் (காட்டமாட்டார்) என்றும், புது ஆறு புத்தாறு என்பதைப் புதார் என்றும் குடமுருட்டியாறு என்பதைக் குடமுருட்டியார் (குடத்தை உருட்டியவர்) என்றும் ஓடம்போக்கியாறு என்பதை ஓடம் போக்கியார் (ஓடத்தைப் போக்கியவர்) என்றும் வழங்குதல் பிழையன்றோ?

வேறு சில ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு வகையில் சிதைந்து பிழையுறப் பயன்பாட்டில் உள்ளன.

(பழைய) சோழநாட்டின் கோடியில் (கடைசியில்) இருந்த கடற்கரை ஊரைக் கோடிக் கரை என்றனர். இப்போதும் தமிழ்நாட்டின் வரைபடத்தைப் பார்த்தால் கிழக்குக் கோடியில் ஒரு புள்ளியாக அவ்வூர் அமைந்துள்ள இடத்தைக் காணலாம். அதனை இன்று கோடியக்கரை என்று எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். ஒருகால் வளைந்த கரை என்னும் பொருளுடையது என்றால் கோடிய கரை என்று "க்" போடாமல் எழுத வேண்டும். (கோடுதல் - வளைதல்; கோட்டம் - வளைவு) ஆனால் இந்த ஊர்க் கடற்கரையில் கோட்டம் (வளைவு) எதுவும் இல்லை.

"ட" எனும் எழுத்தை இடம் வலமாக மாற்றிப் போட்டதுபோல் இரண்டு நேர்க்கோடுகளின் சந்திப்பாக அவ்விடம் இருப்பதைப் படத்தில் காணலாம். ஆதலின் கோடிக்கரை என்றே குறித்தல் பிழையற்றது.



பிழையின்றித் தமிழ் பேசுவோம்,                  எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
மொழிப்பயிற்சி - 5:-

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் (அமிர்தம்) தோன்றியதன்றோ? அந்த அமிர்தத்தைக் குடத்தில் கொண்டு வந்து திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப் பெற்ற ஈசன் பெயர் அமிர்தகடேசுவரர்.(கடம் - குடம்). அந்தப் பெருமான் அருள்பாலிக்கும் ஊர் திருக்கடவூர். "திரு" எனும் அடைமொழி, தலங்களைச் சார்ந்து வருதல் அறிவோம். (அமிர்த) கடம் கொண்டு பூசிக்கப்பெற்ற ஊர் கடவூர். இந்த அழகான பெயர் இன்று என்ன ஆயிற்று? திருக்கடையூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
- அறுபது அகவை நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி)
- எண்பதகவை நிறைவு (சதாபிஷேகம்)
விழாக்கள் செய்திட மிகச் சிறந்த புனிதத் திருத்தலம் - மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வரம் தந்த சீர்த்தலம், கடையூரா? கடைப்பட்ட ஊரா?
சிந்தியுங்கள்; பிழையைத் திருத்துங்கள்.

சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது. ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா - சோலை) "திரு" என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று. இந்நாளில் இத்தலத்தின் பெயரைத் திருவானைக்கோவில் என்றும் திருவானைக் காவல் என்றும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களும் தவறான பெயருக்கு விளக்கம் வேறு தருகிறார்கள். இது சரிதானா? திருத்தப்பட வேண்டாவா?

நல்லவேளை; மயிலாடுதுறை இன்று தப்பித்துக் கொண்டது. மயில்கள் ஆடுகின்ற வளமார்ந்த காவிரித்துறையுடைய ஊர் மயிலாடுதுறை என்று சொல்லப் பெற்றது. இதனை மாயூரம் என்று பின்னாளில் வடமொழியால் குறித்தனர். (மயூரம் - மயில்). இந்த மயூரத்தை மக்கள் மாயவரம் ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கும் இந்தப் பெயரைப் பலரும் சொல்கிறார்கள். மாய்வதற்கு (சாவதற்கு ) வரம் தரும் ஊரா இது?

ஒப்பார் இல் அப்பன் - ஒப்பிலியப்பன் என்று பெருமாளுக்குப் பெயர் சூட்டிப் பாடிப் பரவினர் அடியார்கள். பரம்பொருள், ஒப்பு - நிகர் அற்றது அன்றோ? இப்பெருமான் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன தெரியுமா? உப்பிலியப்பன்கோவில்.

ஒப்பு இலி என்பதைப் பேச்சு வழக்கில் உப்பு இலி - உப்பிலி என்று ஆக்கி, அந்தப் பெருமாளுக்கே உப்பில்லாத திருவமுது படைத்து வழிபடுகிறார்கள். கடவுளுக்கே உப்பில்லாப் பத்தியமா? தமிழை அறியாத கொடுமையல்லவா இது?

ஒற்று மிகுதலும் மிகாமையும்,ஒற்று மிகுதலை வலி மிகுதல் என்று இலக்கண நூலார் சொல்வர்.

வல்லெழுத்து ஆறனுள் க,ச,த,ப என்னும் நான்கு மட்டுமே மொழி முதல் எழுத்தாக வரும்.
ஒரு சொல்லிருக்க (நிலை மொழி) மற்றொரு சொல் வந்து சேரும்போது சில இடங்களில் இந்த க,ச,த,ப - என்பவை மிகும்.
சில இடங்களில் மிகா.
சிறந்த தமிழறிஞர்களின் நூல்களைப் படித்தாலே, மிகுதல், மிகாமைப் பற்றி இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.

எதற்கையா இந்த வம்பு?
க்,ச், த்,ப் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதிவிட்டால் என்ன என்று கருதுபவர் இருக்கிறார்கள். வாழை பழம், கீரை கறி - படித்துப் பாருங்கள், இயல்பாக உச்சரிக்க முடிகிறதா? வாழைப்பழம், கீரைக்கறி என்று சொன்னால்தான் நிறைவாக உணர்கிறோம். இந்த ஒற்றெழுத்து மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு என்பதைத் தமிழர் அறிய வேண்டும். பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.

மருந்து கடை - மருந்தைக் கடை
மருந்துக்கடை - மருந்து விற்கும் கடை

ஏழை சொல் - ஏழையின் வார்த்தை
ஏழைச்சொல் - ஏழு எண்ணிக்கையைச் சொல்

வேலை தேடு - ஒரு வேலையைத் தேடிக் கொள்
வேலைத் தேடு - வேல் என்னும் ஆயுதத்தைத் தேடு

நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது
நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்)

சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு, மரணம்

கைமாறு - ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறுவது
கைம்மாறு - நன்றிக்கடன்

பொய் சொல் - பொய் சொல்வாயாக
பொய்ச்சொல் - பொய்யான சொல்


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 6:-


அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது.

அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்:- சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.
சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.

சின்னத் திரை என்றால் சின்னம் + திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.

தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.
பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?

கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?

கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும் சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.

வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?

2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை

3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்

4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்

5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்

6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,

7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.

8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.

9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்

10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.



பிழையின்றித் தமிழ் பேசுவோம்,                எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்



மொழிப்பயிற்சி - 7:-

வல்லெழுத்து மிகா இடங்கள்
1. அது,​​ இது,​​ எது முன் மிகாது.
(எ-டு) அது பெரிது,​​ இது சிறிது,​​ எது கரும்பு?

2. அவை,​​ இவை,​​ எவை முன் மிகாது.
(எ-டு) அவை சென்றன,​​ இவை கண்டன,​​ எவை தின்றன?

3. அவ்வாறு,​​ இவ்வாறு,​​ எவ்வாறு?
(எ-டு) அவ்வாறு சொன்னார்,​​ இவ்வாறு செப்பினார்,​​ எவ்வாறு கண்டார்?

4. ஒரு,​​ இரு,​​ அறு,​​ எழு என்னும் எண்களின் முன் மிகாது.
(எ-டு) ஒரு கோடி,​​ இரு தாமரை,​​ அறுபதம்,​​ எழுசிறப்பு.

5. பல,​​ சில முன் மிகாது.
(எ-டு) பல சொற்கள்,​​ சில பதர்கள்,​​ பல தடைகள்,​​ சில கனவுகள்.

6. உகர ஈற்று வினையெச்சங்கள் முன் மிகாது.
(எ-டு) வந்து சென்றான்,​​ நின்று கண்டான்.

7. அத்தனை,​​ இத்தனை முன் மிகாது.
(எ-டு) அத்தனை குரங்குகள்,​​ இத்தனை பசுக்களா?

குறிப்பு:- அத்துணை முன் மிகும்.
(எ-டு) அத்துணைப் பெயர்களா? இத்துணைச் சிறப்பா?

8. பெயரெச்சம் முன் மிகாது.
(எ-டு) ஓடாத குதிரை,​​ வந்த பையன்,​​ பறந்த புறா

குறிப்பு:- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) ஓடாக் குதிரை,​​ பாடாத் தேனீ

9. என்று,​​ வந்து,​​ கண்டு முன் மிகாது.
(எ-டு) என்று சொன்னார்,​​ வந்து சென்றார்,​​ கண்டு பேசினார்.

வல்லொற்று மிகுமிடங்கள்,​​ மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை. சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது.
இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வேற்றுமை உருபுகள் (2 முதல் 7 முடிய) விரிந்து (வெளிப்படையாக) இருப்பின் வேற்றுமை விரி எனப்படும்.
நூலைக் கற்றான் - இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது.

உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும்.
பால் பருகினான் - இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.

ஒரு வினைச் சொல் நிற்க,​​ அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச்சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம்.
(எ-டு) வந்து (முற்றுப் பெறாத வினை) நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும்.

இதுபோல் முற்றுப் பெறாத வினை,​​ ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும்.
வந்த (முற்றுப் பெறாத வினை) பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது. இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து (வினையின் கடைசி எழுத்து) இல்லாமற் போயிருந்தால் (கெட்டிருந்தால்) அது ஈறு கெட்ட பெயரெச்சம்; அதுவே எதிர்மறைப் பொருளும் (இல்லை என்பது) தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு) உலவாத் தென்றல் - உலவாத தென்றல் என்பதில் "த்" என்னும் ஈற்றெழுத்துக்கெட்டு (இல்லாமற் போய்) உலவா என நின்று "த்" வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று. தென்றல் உலவும் (அசையும்) இது உலவாத (அசையாத) என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.

ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை. பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும். "மை" விகுதியும் கெட்டிருக்கும்.
(எ-டு) செந்தாமரை - இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும்.

இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
(எ-டு) வட்டக்கல் - வட்டமாகிய கல். கல்லே வட்டம். வட்டமே கல்.


பிழையின்றித் தமிழ் பேசுவோம்,              எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

மொழிப்பயிற்சி - 8:-

இலக்கண விளக்கம் எழுதிக் கொண்டே போனால் அது விரிந்து கொண்டே செல்லும். எளிதாகவும்,​​ சுருக்கமாகவும் சிலவற்றை அறியுமாறும் எழுதினோம். ஒற்றுமிகுதல் தொடர்பாக அறியத்தக்க மற்றும் இரண்டு செய்திகளையும் தருகிறோம்.

உவமைத் தொகை என்பது ஒன்று. ஒன்றை மற்றதற்கு உவமையாகச் சொல்லும் போது உவமை உருபு (போல,​​ ஒத்த,​​ அனைய, நிகர்த்த ) மறைந்திருப்பது உவமைத் தொகை.
(எ-டு) முத்துப்பல் என்பது முத்து போன்ற பல் எனும் பொருளது.
இங்கே உவமைத் தொகையில் சந்தி "ப்" மிகுந்தது. உவமை விரியில் மிகவில்லை.

குற்றியலுகரம் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. இதை விளக்கவே பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். இயன்றவரை சுருக்கமாகச் சொல்வோம்.

குறைந்த ஓசையுடைய "உ" எனும் எழுத்து.
உகரத்திற்கு ஒரு மாத்திரை.
குறைந்த உகரத்திற்கு அரை மாத்திரை.

தொடர் வகையான ஆறு வகைப்படும்,​​ சொல்லின் ஈற்றில் வல்லொற்றின் மீது உகரம் ஏறி (சேர்ந்து) வருதல் இதன் இயல்பு.
(எ-டு) குரங்கு - இச்சொல்லின் "கு"வில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும்.

முழுமையான உகரம் எது?
அது முற்றியலுகரம்.
பசு- "சு"வில் உள்ள உகரம் முழுமையானது.

வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லொற்று மிகும் என முன்னர் சொல்லியிருக்கிறோம்.
பத்து - இதில் உள்ள "உ" (த் + உ) அயலில் "த்" என்ற வல்லெழுத்தை நோக்க வன்தொடர்க் குற்றியலுகரமாம்.
பத்துப்பாட்டு இங்கே வல்லொற்று மிகுதலைக் காண்கிறோம்.
எட்டுத்தொகையும் இவ்வாறே.
எழுத்து என்பதில் வன்தொடர்க் குற்றியலுகரம் உள்ளது.

"கள்" எனும் பன்மை விகுதி சேரும்போது வல்லொற்று மிகுமா? "கள்" ஒரு தனிச் சொல் அன்று; பன்மை காட்டும் விகுதி.
ஆதலின் எழுத்துகள் என்பதே இயல்பானது. இவ்வாறே தலைப்புகள்,​​ இனிப்புகள் என்று இயல்பாக எழுதுவதே பொருத்தம்.
ஆயினும் பழந்தமிழ்ப் புலவர் (பரிமேலழகர் உள்ளிட்டவர்) "எழுத்துக்கள்" என்று எழுதியுள்ளார்கள்.
ஆதலின் இருவேறு முறையிலும் எழுதலாம். ஆயினும் இனிப்புக்கள் வழங்கப்பட்டன எனும்போது இனிப்புச் சுவையுடைய "கள்" எனும்
பொருள் காணக்கூடும். ஆதலின், "இனிப்புகள்" என்றே எழுதுக.

வலி மிகுதல் - மிகாமை சில குறிப்புகள்:-

தமிழ் பேசு,​​ தமிழ்ப் பேச்சு:​​-
மேற் காணும் இரண்டிலும் தமிழ் என்பது நிலைமொழி.
பேசு,​​ பேச்சு என்பன வருமொழி.
ஒன்று இயல்பாகவும்,​​ ஒன்று "வலி" மிகுந்தும் வந்திருப்பது ஏன்?
தமிழ் பேசு என்பது தமிழில் பேசு என விரியும். ஆதலின் ஐந்தாம் வேற்றுமைத் தொகை.
தமிழ்ப் பேச்சு என்பது தமிழில் ஆகிய பேச்சு அல்லது தமிழில் பேசப்பட்ட பேச்சு என விரியும். இதனில் "இல்" உருபோடு பிறிதொரு சொல்லும் மறைந்திருப்பதால் உருபும், பயனும் உடன் தொக்க தொகை.

தமிழ் படி- தமிழைப் படி - இரண்டாம் வேற்றுமைத் தொகை தமிழ்ப்படி - தமிழில் உள்ள படி - உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
தமிழ்ப் படம்,​​ தமிழ்ப்பாடம்,​​ தமிழ்ப் பேராசிரியர் என்பவற்றை விரித்துப்பொருள் காண்க.

ஊர்ப் பெயர்களின் முன்னர் க,ச,த,ப வந்தால் வல்லெழுத்து மிகும்.
(எ-டு)
1. திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
2. சென்னைக் கம்பன் கழகம்
3. அம்பத்தூர்த் தொழிற்பேட்டை

ய்,ர்,ழ் ஈறாக வரும் சொற்கள் முன் வல்லெழுத்து பெரும்பாலும் மிகும்.
(எ-டு)
1. தாய்ப்பாசம்,
2. வேர்க்கடலை
3. யாழ்ப்பாணம்
4. நாய்க்குட்டி
5. நீர்ச்சோறு
6. கூழ்ச்சட்டி

காய்கதிர் - வினைத் தொகையில் மிகவில்லை (காய்ந்த கதிர்,​​ காய்கின்ற கதிர், காயும் கதிர்)
மோர் குடி - வேற்றுமைத் தொகையில் மிகவில்லை (மோரைக் குடி)
தாழ் சடை - இதுவும் வினைத் தொகை - மிகவில்லை.
வேய்ங்குழல் என்று வல்லொற்று மெல்லொற்றாகத் திரிதலும் உண்டு (வேய்- மூங்கில்)

"இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்",என்பது பொதுவிதி.
உயிரோசை இறுதியில் சொற்கள் முன் வரும். க,ச,த,ப க்கள் மிகும்.
(எ-டு)
1. வரச் சொன்னான் (ர் + அ = ர)
2. பலாப் பழம் - (ல் + ஆ = லா)
3. கரிக்கட்டை - (ர் + இ = ரி)

எதிர்மறைப் பெயரெச்சத்தில் (வலி) மிகாது.
(எ-டு)
வாடாத பூ (த் + அ = த)
அண்ணாதுரையா? அண்ணாத்துரையா?
துரை என்பது (Durai) வடசொல். மெல்லொலி கொண்டது. ஆதலின் "த்" மிகாது.
ஆனால் துரை (Thurai) என்று அழுத்தி ஒலித்தால் தமிழ் வல்லெழுத்தாகி அண்ணாத்துரை என்று வரும்.
ஒலிக்கும் முறையை ஒட்டி "வலி" மிகுதலும் மிகாமையும் ஏற்படுகின்றன.

பிழையின்றித் தமிழ் பேசுவோம்,           எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

மொழிப்பயிற்சி - 9

ஞானசம்பந்தர் - ஞானச் செல்வர்
இரண்டிலும் ஞான என்பது நிலைமொழி.
ஒன்றில் ஒற்று மிகாமலும்,​​ ஒன்றில் மிகுந்தும் வந்துள்ளதேன்?

சம்பந்தர் (சம்பந்தம்) வடசொல். 'sa' என்ற ஒலியை உடையது. செல்வர் என்பது தமிழ்ச்சொல். செ (che)​​ என அழுத்தி ஒலிக்கப்படுதலின் வல்லெழுத்து மிகுந்தது.
ஞானச்சம்பந்தர் என்பதும் ஞான செல்வர் என்பதும் பிழையாகும்.
ஞானபீடம் - இலக்கியப் பீடம்
ஞான பீட விருது என்கிறோம். இங்கே ஒற்று மிகவில்லை.
இலக்கியப் பீடம் இதழ் என்கிறோம். இங்கே ஒற்று மிகுந்துள்ளது. ஏன்?
ஞானம்,​​ பீடம் இரண்டும் வடசொற்கள்.
B - பீடம் என்பது இருக்கை. "இலக்கியம்" தமிழ். B - பீடத்தையும்,​​ P - பீடம் எனத் தமிழ் ஒலிப்படுத்தி உரைத்தலால் இலக்கியப்பீடம் என்று ஒற்று மிக்கது. மற்றும் பீடு + அம் என்றும் பிரித்துப் பெருமை,​​ அழகு எனப் பொருள் காணலும் ஆகும். (அம்-விகுதி)

ஒருகால் - ஒருக்கால்
"உன்னால் ஒருக்காலும் இதைச் செய்ய முடியாது" என்று பேசுகிறோம்.
ஒரு பொழுதும்,​​ எந்தச் சமயத்திலும் முடியாது என்பதே இதன்பொருள்.
ஆனால் இச்சொல் ஒருகாலும் என்றிருப்பதே முறை,​​ நெறி. இங்கே வல்லொற்று மிகாது.

ஒரு பொழுதும் என்பதை,​​ ஒருப்பொழுதும் என்று சொல்லுவோமா?
இலக்கியச் சான்று:-
"ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்".
எதிர்க்கட்சி - எதிர்கட்சி
எதிரில் உள்ள கட்சி அல்லது எதிரியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி.

ஒரு விளையாட்டில் இரண்டு கட்சிகள் மோதும்போது எதிர் எதிரே இருந்து மோதுவதால் எதிர்க்கட்சி எனல் சரியே.
இவ்வாறே சட்டமன்றத்திலும் ஆளும் கட்சிக்கு வரிசைக்கு எதிரே இருப்பது எதிர்க்கட்சி எனல் பொருத்தமே.
ஆனாலும் எதிர்க்கட்சி என்ன செய்கிறது?
நேற்று எதிர்த்தது,​​ இன்று எதிர்க்கிறது,​​ நாளையும் எதிர்க்கும்.
எதிர்த்த,​​ எதிர்க்கிற,​​ எதிர்க்கும் கட்சியை எதிர்கட்சி என வினைத்தொகையாகச் சொல்லுதலும் சரியாகுமன்றோ?

ஒற்று இரட்டித்தல்:​​-
ஒற்றுமிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.
சோறு + பானை = சோறுப்பானை என்று எழுதுவதில்லை. சோற்றுப்பானை என்கிறோம்.
ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.
சோறு,​​ ஆறு என்பவற்றுள் (ற் + உ= று) உள்ள "ற்" மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.
சோ+ ற் + ற் + உ = (சோற்று) ஒற்று இரட்டித்த பின் வலி (வல்லொற்று) மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.
அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும். அடையாறில் என்று எழுதுவது பிழை.

ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம். ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.
மாடு + சாணம் = மாட்டுச்சாணம் என்கிறோம்.
வீடு + சோறு = வீட்டுச் சோறு என்கிறோம்.
இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை. தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது,​​ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது? தமிழ்நாடு அரசு ஏன் வந்தது? தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.

கிணறு + தவளை = கிணற்றுத் தவளை.
காடு + பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு + அரசு = நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?
கட்டுப்பாடு + அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.
மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.
நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.
விளையாட்டு செய்திகள் என்று தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். விளையாட்டுச் செய்திகள் என்று வல்லொற்று மிகுதல் வேண்டும்.
விளையாட்டைப் பற்றிய செய்திகள் என உருபும் பயனும் உடன் தொக்க தொகை இதுவாம். விளையாட்டுச் செய்திகளை விளையாட்டாய் எண்ணாதீர் (இக்குறிப்பில் ஒற்று இரட்டித்தல் இல்லை. வல்லொற்று மிகுதல் மட்டுமே) .

பிழையின்றித் தமிழ் பேசுவோம்,               எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

மொழிப்பயிற்சி - 10

சொற்றொடர் அமைப்பு:-​​
பத்திரிகையாளரும்,​​ வானொலி,​​ தொலைக்காட்சி ஊடகத்தாரும் பள்ளி ஆசிரியர்களும் கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று சொற்றொடர் (வாக்கியம்) அமைப்பு. முக்கியமாக ஒருமை, பன்மை மயக்கம் சொற்றொடர்களில் இருத்தல் ஆகாது. ஆங்கிலத்தில் ஒருமை, பன்மை மயங்க எழுதினால் ஏளனம் செய்கிறோம். இடித்துரைக்கிறோம். தமிழில் மிகத் தாராளமாக இப்பிழையைப் பலரும் செய்கிறார்கள்.

1. பிரேசில் நாட்டில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. (ஒரு செய்தித்தாளில்)
2.பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலைகள் தெரிவிக்கப்பட்டது.
இடங்கள் என்னும் பன்மைச் சொல்லுக்கேற்பச் சூழப்பட்டுள்ளன என்றும், கவலைகள் என்னும் சொல்லுக்கேற்ப தெரிவிக்கப்பட்டன என்றும் முடிக்க வேண்டும் என்று அறியாதவர்களா? அல்லது அக்கறையின்மையா?

1.ஒவ்வொரு சிலையும் வண்ண வண்ணமாக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. (ஒரு தொலைக்காட்சி செய்தி)
2.இந்த மன்றத்தின் செயற்பாடு ஒவ்வொன்றும் பாராட்டிற்குரியன (ஒரு சிற்றிதழில்)
ஒவ்வொரு சிலையும் எனும் ஒருமைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், செயற்பாடு ஒவ்வொன்றும் எனும் ஒருமைக்கேற்ப பாராட்டிற்குரியது என்று முடித்தல் வேண்டும்.

இந்த நுட்பமெல்லாம் நம்மவர் சிந்திப்பதில்லை.
'அர்' எனும் பலர்பால் விகுதி கொண்டு முடிய வேண்டிய வாக்கியங்களைச் செய்தி படிப்பவர் சிலர் முழுமையாகப் படிக்காமல் அஃறிணைப் பன்மை கொண்டு முடிக்கிறார்கள். இது ஒரு பாணி போலும்.

1.விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தன. (ர்)
2. பலநாட்டுப் பிரதிநிதிகளும் வந்திருந்தன. (ர்)
முடிவில் உள்ள 'ர்' ஒலியை விழுங்கிவிடுகிறார்கள். கேட்கும் நம் செவியில் அச் செய்தி தேளாய்க் கொட்டுகிறது.

ஒரு கட்டுரையாளர் எழுதியுள்ளார்:- ''ஓய்வாக இருக்க முடியாத நிலையில் ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டிருப்பீர்கள்''.
இந்த வாக்கியத்தில் ஏதாவது என்பது ஒருமை,​​ வேலைகள் என்பது பன்மை. ஏதாவது வேலையைச் செய்து கொண்டிருப்பீர்கள் என்று எழுத வேண்டும். சொற்றொடர் அமைப்பில் கருத்துப் பிறழ உணருமாறு நேர்ந்துவிடக் கூடாது.

ஒரு நூல் மதிப்புரையில் ஓர் எழுத்தாளர் எழுதியுள்ளார்:-
''மனுதர்ம சாஸ்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டுள்ளவர்க்கும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும்''.

"மனுதர்ம சாத்திரம் பற்றித் தவறான எண்ணங்கள் கொண்டவர்கள் - அந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ளவும் மேலும் இதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும்'' என்று இருந்தால் இச்சொற்றொடர் சரியானதாகும். மதிப்புரை செய்துள்ளவரின் கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும். எழுதப்பட்டுள்ளபடி 'தவறான எண்ணம் கொண்டவர்க்கும் இந்நூல் பயன்படும்' என்பது தவறான கருத்தன்றோ?

ஒரு விழா பற்றி அறிவிப்பாளர் சொல்லுகிறார்:-
''இன்றைய விழா சரியாக மாலை ஆறு மணியளவில் நடைபெறும்.'' இத்தொரில் பிழையுள்ளதா?
உள்ளது.
எப்படி?
சரியாக என்று சொன்னால் ஆறு மணி அளவில் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? சரியாக ஆறு மணிக்கு என்றோ ஆறு மணியளவில் என்றோ சொல்லுதலே சரியாகும். சரியாக என்று சொல்லிவிட்டு ஏறத்தாழ (அளவில்) என்பது முரணன்றோ?

ஒரு கூட்டத்தில் பேச்சாளர் பேச்சைத் தொடங்குகிறார்:-
''இங்கு கூடியுள்ள அனைவர்க்கும் என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. அதென்ன? வணக்கத்தில் முதற்கண் வணக்கம்,​​ இடைக்கண் வணக்கம்,​​ இறுதிக் கண் வணக்கம் என்றெல்லாம் உண்டா? என்னுடைய வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன் என்றால் வாக்கியம் சரியான பொருளில் அமையும். வணக்கத்தை ஏன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? அனைவர்க்கும் வணக்கம் என்றோ,​​ அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் என்றோ தொடங்கினால் அழகாக இருக்குமே..